கல்விச் சாதனை கொண்டாட்டங்களுடன் நிற்காது, தக்கவைக்கவும், முன்னேறவும் பாடுபடுங்கள் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் வாழ்த்தியுள்ளர்.
வெளியான 2021ஆம் ஆண்டு சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்த அவர், அனைத்து தரப்புக்கும் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தார்.
அண்மையில் வெளியான பெறுபேறு மகிழ்ச்சியளிக்கின்றது. வடக்கு மாகாணத்தில் கரைச்சி வடக்கு கல்வி வலயம் முதல் இடத்திலும், கரைச்சி தெற்கு கல்வி வலயம் இரண்டாம் இடத்திலும் உள்ளமை மாவட்டத்துக்கு பெருமையளிக்கின்றது.
கிளிநொச்சி கல்வி வலயம் இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னர் அதித வளர்ச்சியடைந்துள்ளது. அதற்காக பாடுபட்ட அனைவரையும் பாராட்டுவதுடன் வாழ்த்துகிறேன்.
கிளிநொச்சி மாவட்டம் கல்வியில் முன்னேற்றத்தை கண்டு வந்தாலும் தரப்படுத்தலில் பின்னால் இருந்தது. ஆனால், இம்முறை மாகாணத்தில் முதல் நிலையிலும், தேசிய ரீதியில் 9ம் நிலையிலும் உள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.
அதற்காக பாடுபட்ட அனைவரையும் பாராட்டி வாழ்த்துகிறேன். மாணவர்கள் அனைவரையும் மனமுவந்து வாழ்த்துகிறேன்.
இந்த வெற்றி கொண்டாட்டங்களுடன் நிறுத்திவிடாது, இந்த நிலையை தக்கவைக்கவும், மேலும் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கவும் வேண்டும். அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க தான் தயாராக உள்ளதாகவும் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.