மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி “பி” வலயத்தின் வலது கரை காணிகளை மகாவலி திட்டத்தின் பெயரால் அபகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு கிரானில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்திற்கு செல்லும் கிரான்-புலிபாய்ந்தகல் பிரதான வீதியை மறித்து இந்தபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தார்கள். கிரான்-புலிபாய்ந்தகல் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது மக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டதுடன் பிரதேச செயலாளர் செல்வதை தடுத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எமது பூர்வீக காணிகளை கையகப்படுத்தும் நோக்கத்தினை மகாவலியே விட்டுவிடு,காணி அபகரிப்பினை உடன் நிறுத்து,காணி அபகரிப்பு என்னும் பெயரில் தமிழ் பேசும் பூர்வீக மக்களின் வாழ்விடங்களை அபகரிக்கும் சதித்திட்டத்தினை நிறுத்து,சிறுபான்மை இனங்களும் இந்த நாட்டின் இனங்களே,கிழக்கு மாகாண காணிகளை பறிப்பதன் நோக்கம் என்ன போன்ற சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
மகாவலி திட்டத்தின் கீழ் தற்போது காணிகளை அளக்கும் செயற்பாடுகளை உடன் நிறுத்தவேண்டும் என்பதுடன் அக்காணிகளை வேறு இனங்கள் அபகரிப்பதை அனுமதிக்கமாட்டோம் எனவும் இதன்போது கலந்துகொண்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
சோளம் பயிர்ச்செய்கை என்ற நோக்கில் மகாவலி வலயம் என்ற கருப்பொருளைக்கொண்டுவந்து தமிழ் பேசும் மக்களின் காணிகளை அபகரித்து பெரும்பான்மையினத்தை கொண்டுவந்து குடியமர்த்துவதற்கான திட்டமிட்ட சதி நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்துவருவதாக விவசாயிகள் இதன்போது குற்றஞ்சாட்டினார்கள்.
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தினை அம்பாறை மாவட்டமாக பிரித்து காணிகளை அபகரித்ததுபோன்று இன்று அரசாங்கம் மட்டக்களப்பில் திட்டமிட்ட குடியேற்றத்தினை முன்னெடுத்து இனவிகிதாசாரத்தை மாற்றும் செயற்றிட்டத்தினை முன்னெடுக்கும் நிலையுள்ளதாகவும் இங்கு விவசாயிகள் தெரிவித்தனர்.
எழுவான் கரையில் சுற்றுலாதுறை அபிவிருத்தி என்ற பெயரிலும் படுவான்கரையில் மகாவலி திட்டம் என்னும் பெயரிலும் காணி அபகரிப்பினைமேற்கொண்டு பெரும்பான்மையினத்தை குடியேற்ற திட்டமிட்ட நடவடிக்கையாக இதனை கருதுவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தன்போது குறித்த பகுதிக்கு வந்த கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன் குறித்த காணி அளக்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 12ஆம் திகதி மகாவலி உத்தியோகத்தர்களுடன் மாவட்ட விவசாயிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அதன்போது இது தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுமாறும் பிரதேச செயலாளர் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.எனினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு காணிகளை வழங்குவதற்கு அனுமதிக்கமாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.