இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் தங்கியிருப்பதனை தவிர்க்கும் வகையில் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அவசியமான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை தயாரிக்க தேர்மனைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்திய தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் பல்துறை குழுவுடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உள்நாட்டின் அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார்.
அது தொடர்பில், இந்திய தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையும் (NDDB) இந்தியாவின் அமுல் பால் நிறுவனமும் இணைந்து இந்நாட்டில் திரவப் பால் உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கான ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் உள்ளுர் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், நீண்டகால திட்டத்தினூடாக இலங்கையை பாலில் தன்னிறைவடையச் செய்வதே இதன் நோக்கம் என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.