சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கிலான கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் 11.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டச் செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையின் உதவிப் பணிப்பாளர் பு.ரமணன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் கலந்து சிறப்பித்தார்.
USAID நிறுவனத்தின் நிதி அனுசரணையில், சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்க செயற்பாடு (SCORE) திட்டத்தின் கீழ் ACTIION UNITY LANKA நிறுவனத்தின் ஏற்பாட்டில் “பொருளாதார நெருக்கடிக்கான பதிலளிப்பு நடவடிக்கைகள் – சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பு” திட்டமாக இது அமைந்துள்ளது.
குறித்த கலந்துரையாடல் உள்ளூர் உற்பத்தி முயற்சியாளர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கான உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியான நிலையில் மாவட்டத்தில் தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ள தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு, விதாதா வள நிலையம், தொழில்துறை திணைக்களம், கைத்தொழில் அபிவிருத்தி சபை ஆகியன முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி திட்டங்களில் பங்குபற்றிய, இத் திட்டத்தில் பயனடைந்த தெரிவு செய்யப்பட முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இதன்போது கலந்து கொண்ட நடுத்தர மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்களது தற்போதைய தொழில் அடைவுகள் மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டன.
மேற்படி கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன், Action unity lanka பிரதம நிறைவேற்று அதிகாரி R.தவசீலன், Action unity lanka நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு, விதாதா வள நிலையம், தொழில்துறை திணைக்களம், கைத்தொழில் அபிவிருத்தி சபை உத்தியோகத்தர்கள், மக்கள் வங்கி முகாமையாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர், பனை அபிவிருத்தி சபை உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.