உலகளாவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் மத்திய கிழக்கின் போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் நோக்கில், அனைத்து அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் வாரத்திற்கு நான்கு நாட்கள் மாத்திரமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு புதன்கிழமையும் பாடசாலை விடுமுறை தினமாகக் கருதப்படும்.
அந்த நாட்களில் மாணவர்கள் வீட்டிலிருந்தே சுயகற்றலில் ஈடுபடுவதற்கான வழிகாட்டுதல்களை அதிபர்கள் வழங்க வேண்டும்.
பாடத்திட்டங்களை குறித்த காலத்திற்குள் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதால், விழாக்கள் மற்றும் வெளி நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்காகப் பாடசாலை நேரத்தைப் பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசியமான நிகழ்வுகளைக் குறைந்த எரிபொருள் செலவில் நடத்துமாறு அதிபர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாடசாலைகளால் ஏற்பாடு செய்யப்படும் கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள பயணங்கள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அதிக எரிபொருள் நுகர்வை ஏற்படுத்தும் வாகனப் பேரணிகள் மற்றும் அது சார்ந்த ஊர்வலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் சேமிக்கப்படும் எரிபொருள், நாட்டின் ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.














