பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் எனப் பிரதமர் அன்டி பே(ர்)னாம் (Andy Burnham) தெரிவித்துள்ளார்.
பரோ-இன்-பர்னஸ் ( Barrow-in-Furness) பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ‘டிரெட்நாட்’ (Dreadnought) ரக நீர்மூழ்கிக் கப்பல்களைப் பார்வையிடுவதற்கு முன்னதாகப் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சுமார் 8.4 பில்லியன் பவுண்டுகள் செலவிடப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம், நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதுடன், 47,000 தொழிலாளர்கள் மற்றும் வேலைப் பயிற்சி பெறுபவர்கள் பயன்பெறுவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது பயன்பாட்டிலுள்ள ‘வான்கார்ட்’ (Vanguard) ரக நீர்மூழ்கிக் கப்பல்களுக்குப் பதிலாக 2030-ஆம் ஆண்டளவில் இந்த புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரித்தானிய கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படவுள்ளன.
எனினும், நேட்டோ அமைப்பின் இலக்கிற்கு ஏற்ப நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிப்பது குறித்துப் பிரதமர் Andy Burnham தெளிவான காலக்கெடுவை வழங்கவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
















