இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான எந்தவொரு சொற்பதமும் ஜனாதிபதியின் அழைப்பில் இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சிக்குள் தீர்வு எந்தவகையும் சாத்தியமில்லாத நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு மக்களை ஏமாற்ற தாம் விரும்பவில்லை என்றும் ஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சிக்குள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கான அரசியல் அங்கீகாரத்தினை தேட முனையும் பேச்சுக்களில் பங்கேற்று வரலாற்று தவறிழைக்க தாம் தயாராக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதியின் அழைப்பை கண்மூடித்தனமாக புறக்கணிக்காமல் குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் அறிவித்துள்ளன.
அத்தோடு முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.