பலவருட பிரச்சினையை வெறும் இரண்டு மாதத்திற்குள் முடிப்பது என்பது ஒரு பொய்யான காரியம் ஆனால் அத்தினத்திற்குள் வரக்கூடிய இணக்கப்பாடு ஒரு நல்ல தீர்வுத்திட்டத்தை கொண்டுவருவதற்கு வாய்ப்புள்ளது என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் அராலியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அந்த இணக்கப்பாட்டில் மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நல்லிணக்கத்தின் ஊடாக கிடைக்கப்பெறும் இந்த தீர்வு திட்டத்தினுள் பொருளாதார, அபிவிருத்தி இடைவெளியை நிரப்புவதற்கு, ஏனைய மாகாணங்களில் இருக்கும் வாய்ப்புகள் எம்மவர்களுக்கும் கிடைப்பதற்கும் வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இராணுவம், கடற்படை, வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் பிடியில் இருக்கின்ற மக்களின் நிலங்களை மீண்டும் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்கஜன் இராமநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.