அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள்க எனும் தொனிப்பொருளில் நெடுங்கேணியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நெடுங்கேணி கரடிபுலவு கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்திற்கு முன்பாக இடம்பெற்ற குறித்த போராட்டமானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் குறித்த முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் இணைய வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகள் ஒருமித்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும், அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள்க, வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தனி மாகாண அலகாக உருவாக்கபட வேண்டும் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர்.
இதன் போது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் வாசித்து காட்டப்பட்டதுடன் இறுதியில் பேரணியாக சென்று போராட்டம் முடிவடைந்தது. இம்மாதம் 5 ஆம் திகதி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் நிறைவுறுகின்றமை குறிப்பிடத்தக்கது.