தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்றால் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள் என யாழ்.வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்.ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே தியாகராஜா நிரோஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நிலையில் இலங்கையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு இலங்கையினுடைய திறை சேரியாக இருக்கலாம் அல்லது நாட்டினுடைய வருமானங்களின் அடிப்படையாக இருக்கலாம் அதற்கான செலவினங்களை ஈடு செய்வதற்கான பணம் போதாது இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
தேர்தல் ஆணைக்குழு எடுத்து வரும் முயற்சியை நாங்கள் வரவேற்கின்றோம். இந்த தேர்தல் ஒத்திவைக்காமல் நடத்தப்பட வேண்டும் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக உள்ளூராட்சி மன்றங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் ஒரு மக்கள் ஆணையை மீளவும் பெற வேண்டிய ஒரு சூழல் இருக்கின்றது.
இவ்வாறான நிலையில் இதற்கான பணம் போதாது என்கின்ற காரணம் காட்டப்பட்டு ஒத்துழைக்கப்படுமானால் நாங்கள் தேர்தல் ஆணையாளருக்கு ஒரு பகிரங்கமாக விடயத்தை முன்வைக்கின்றோம்.
இது உள்ளூராட்சி மன்ற தேர்தல் என்ற காரணத்தின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பணத்தை பெறலாம். ஏனெனில் உள்ளூராட்சி மன்றங்கள் தனியாக வருமானம் ஈட்டும் ஒரு அரச கட்டமைப்பாக இருக்கின்றன, அவ்வாறான சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட அளவு தேர்தலுக்கான செலவீனங்களை அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து பெறுவதற்கு உரிய சுற்று நிரூபம் ஊடாக முன்னெடுத்தாவது இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
ஏனெனின் தேர்தல்கள் என்பது கருத்து பெறுவதற்கும் கருத்து தெரிவிப்பதற்குமான சுதந்திரம் என்ற அடிப்படையில் ஜனநாயகத்துக்காக எங்களுடைய செலவீனங்களில் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.
அதேநேரம் அதனை எங்களுடைய கௌரவ அதையும் ஏற்றுக்கொள்ளும். எங்களைப் போன்ற ஏனைய சபைகளும் இதனை ஏற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.
அரசாங்கம் நிதியில்லை என்று சொல்லி தேர்தல்களை ஒத்தி வைக்குமானால் நிச்சயமாக இது ஒரு ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற செயல் என்கின்ற அடிப்படையில் சர்வதேசம் சில உதவிகளை இந்த தேர்தல்கள் நடத்துவதற்காக செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.