மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் நடைபெறவிருந்த கிறிஸ்தவ மத நிகழ்வினை வெபர் விளையாட்டு மைதானத்திற்கு மாற்றுவதற்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் ஜீசஸ் லீவ் என்னும் அமைப்பினால் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அதிபர்,வலய கல்விப்பணிப்பாளர்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்,பொலிஸாருக்கு எதிராகவும் எழுத்தாணை மனு கோரப்பட்டிருந்த நிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா முன்னிலையில் விசாரகைள் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இந்துக்கல்லூரி சார்பாக சட்டத்தரணி வி.சனுசதாசின் அனுசரணையுடன் சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் ஆஜராகியிருந்தார்.
இந்துக்கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் மார்ச்; மாதம் 24,25,26 ஆகிய திகதிகளில் ஜீசஸ் லீவ் என்னும் அமைப்பின் மாநாடு நடாத்துவதற்கு பாடசாலை நிர்வாகத்தினால் வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்த அனுமதி 17ஆம் திகதி இரத்துச்செய்யப்பட்டிருந்ததாகவும் இதனால் தங்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த அனுமதி இரத்தை இல்லாமல்செய்வதற்காக இந்த வழங்கு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மைதானத்தில் இந்த நிகழ்வுக்கு அனுமதிக்கப்படுமானால் இனமுறுகல்,மதமுறுகல் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் இதனால் பாரிய பிரச்சினைகள் எழக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றது எனவும் அதனால் குறித்த விடயத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு மறுக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தினை தெளிவாக நீதிமன்றுக்கு எடுத்துக்கூறிய பின்னர் நீதிமன்று அதனை ஏற்றுக்கொண்ட நிலையில் இரு பிரிவினரினதும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடாத்துவதில்லை என்ற முடிவுக்கும் அதேவேளையில் அந்த நிகழ்வினை அதே திகதியில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடாத்துவதற்கு மட்டக்களப்பு மாநரகசபையின் அனுமதியைப்பெற்று நடாத்துவதற்கான பணிப்புரை விடுக்கப்பட்டதாக சிரேஸ்ட சட்டத்தரணி தெரிவித்தார்.