இந்திய கடற்படையின் முன்னணி போர்க்கப்பலான ஐஎன்எஸ் மும்பை, மூன்று நாள் பயணமாக நாளை 26ஆம் திகதி இலங்கை வந்தடையவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல், தமது இடைக்கால மேம்படுத்தலை முடித்து, 2023 டிசம்பர் 08 ஆம் திகதி, விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை கட்டளையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், ஐஎன்எஸ் மும்பை, முதல் தடவையாக, இலங்கையில் உள்ள துறைமுகம் ஒன்றுக்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த ஆண்டுக்குள் இந்திய கப்பல்களின் இலங்கைக்கான எட்டாவது துறைமுக அழைப்பாக இந்த பயணம் அமைந்துள்ளது.
இந்தியக் கடற்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட, உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட கப்பல்களில் மூன்றாவது கப்பல் இது என்பதுடன், இந்தக் கப்பல், மும்பையில் உள்ள மசாகன் டாக் லிமிடெட்டில் கட்டப்பட்டது என்று இந்திய உயர் ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஐஎன்எஸ் மும்பை இலங்கை விமானப்படையால் இயக்கப்படும் டோர்னியர் கடல் கண்காணிப்பு விமானத்திற்கான அத்தியாவசிய உதிரிப்பாகங்களை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை இலங்கை வரும் ஐஎன்எஸ் மும்பை, ஆகஸ்ட் 29 ஆம் திகதியன்று கொழும்பில் இருந்து புறப்படும் என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.