அண்மையில்,தமிழ் கட்சிகளையும் குடிமக்கள் சமூகத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்த ஐரோப்பிய நாடு ஒன்றின் ராஜதந்திரிகள் தங்களைச் சந்தித்த தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மத்தியில் ஏன் ஒரு பெண்கூட இல்லை என்று கேட்டிருக்கிறார்கள்.
அவரை சந்தித்து குழுவில் மட்டுமல்ல, அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு என்று அழைக்கப்படுகின்ற மக்கள் அமைப்புக்கும் கட்சிகளுக்கும் இடையிலான கட்டமைப்புக்குள் மொத்தம் 14 பேர்கள் உண்டு. அதில் ஒருவர் கூட பெண் இல்லை. அதுபோலவே தமிழ் கட்சிகள் மத்தியில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் என்று பார்த்தால் அனந்தி சசிதரனின் கட்சியைத் தவிர ஏனைய பெரும்பாலான கட்சிகளில் மேல்நிலைப் பொறுப்புகளில் பெண்கள் இல்லை.
இவை விட முக்கியமாக அண்மையில் ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த மொத்தம் 39 பேர்களில் ஒருவர் கூட பெண் இல்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
அதே சமயம் சிவில் சமூகங்கள்,செயற்பாட்டாளர்கள்,மாணவர்கள், தொழிற்சங்கங்கள் போன்றவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய ஆகப்பிந்திய மக்கள் அமைப்புக்குள் ஒப்பிட்டுளவில் பெண்களின் தொகை அதிகமாக உள்ளது.அந்த அமைப்பு ஒப்பிட்டுளவில் பால் சமநிலையைப் பேண முயற்சிக்கின்றது.ஆனால் கட்சி அரசியல்வாதிகளின் மத்தியில் பால் சமநிலை மிக குறைவாகவே காணப்படுகின்றது.
வெளிநாட்டுத் தூதரகங்களின் சந்திப்புகளில் அல்லது வெளிநாட்டு தூதுவர்கள் வரும்போதெல்லாம் ஆகக்கூடியபட்சம் பால் சமநிலையைப் பேண முயற்சிக்கிறார்கள்.
தமிழ் அரசியலில் பெண்களின் வகிபாகம் என்பது கடந்த 15 ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது எனலாம். உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் உண்டு. அந்தச் சட்டம் காரணமாகவே பெண்களை அதிகமாக உள்வாங்க வேண்டிய ஒரு தேவை கட்சிகளுக்கு ஏற்பட்டது. ஆனால் எத்தனை கட்சிகள் பொருத்தமான பெண் ஆளுமைகளை உள்வாங்கியுள்ளன? என்ற கேள்வி உண்டு. பெண்கள் மத்தியில் தலைமைத்துவ பண்பு மிக்கவர்கள் குறைவு என்று யாராவது சொல்வார்களாக இருந்தால், திருப்பிக் கேட்கலாம் ஆண்கள் மத்தியில் மட்டும் அவ்வாறு தலைமை பண்புள்ளவர்கள் அதிகமாக உண்டா? அப்படி இருந்திருந்தால் ஏன் கட்சிகள் இப்படிச் சிதறிக் காணப்படுகின்றன? ஏன் கட்சிகள் நீதிமன்றம் ஏறுகின்றன?
ஆனால் 2009க்கு முன்பு ஆயுதப் போராட்டத்தில் கணிசமான அளவுக்கு பெண் போராளிகள் காணப்பட்டார்கள்.யுத்த களங்களில் பெண்கள் வீரதீரச் செயல்களைச் செய்தார்கள். பெருமளவுக்கு ஆண் மையச் சமூகமாகிய தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் அவ்வாறு துணிந்து முன்வந்தமையும் கற்பனை செய்ய முடியாத வீரத்தை வெளிக்காட்டியமையும் தியாகங்களை செய்தமையும் தமிழ் நவீன வரலாற்றில் ஒரு பெருந்திரூப்பம் என்றே கூறலாம். ஆனால் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் நிலைமை தலைகீழாகிவிட்டது.
புனர்வாழ்வு பெற்ற ஒரு பெண் போராளி ஒரு முறை ஒரு கதிரையை வைத்து அதில் ஏறி,ஓரமாக நின்ற பப்பா மரத்தில் ஒரு பழத்தைப் பிடுங்க முயற்சித்திருக்கிறார். அவருடைய தாயார் அவரை எச்சரித்திருக்கிறார். “அயலில் இருப்பவர்கள் கண்டால் என்ன நினைப்பார்கள் இறங்கு, அதில் ஏறி நிக்காதே” என்று. அந்தப் பெண் தனது நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார் “இயக்கத்தில் இருந்த காலத்தில் தென்னை மரம் ஏறிதேங்காய் பிடுங்கியவர்கள் நாங்கள். ஆனால் கதிரை வைத்து மதிலில் ஏறி பப்பாப் பழம் பிடுங்க வேண்டாம் என்று எனது தாயார் கூறுகிறார்” என்று.
அவருடைய கவலை நியாயமானது. ஆனால் எந்தக் குடும்பங்களில் இருந்து பெண்கள் ஆயுதப் போராட்டத்திற்கு போனார்களோ,அதே குடும்பங்களில் பால் சமத்துவம் தொடர்பான விழிப்பு உருவாக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி இங்கு முக்கியம். குடும்ப மட்டத்திலும் அந்த விழிப்பு ஏற்படவில்லை. சமூகத்தின் ஏனைய எல்லா நிறுவன மட்டங்களிலும் அது பெருமளவுக்கு ஏற்படவில்லை. அரசு சார்பற்ற நிறுவனங்கள், அனைத்துலக அரசு சார்பற்ற நிறுவனங்களில் பால் சமத்துவத்தைப் பேண வேண்டிய ஒரு நிலைமை உண்டு. ஏனென்றால் அவை அனைத்துலக நியமங்களுக்கு உட்பட்டு பால் சமநிலையை பேண வேண்டும். ஆனால் உள்ளூர் நிறுவனங்கள் எல்லாவற்றிலும் அந்த நிலைமை இல்லை.
பள்ளிக்கூடங்களில் பால் சமத்துவம் முழுமையாகப் பேணப்படுகிறது என்று எடுத்துக் கொள்ள முடியாது. பிள்ளைகளை உருவாக்கும் பள்ளிக்கூடங்களில் பேணப்படாத பால் சமத்துவத்தை சமூகத்தில் ஏனைய மட்டங்களில் எப்படி எதிர்பார்ப்பது? சில முன்னணிப் பாடசாலைகளில் பெண்கள் முன்னிலையில் மிடுக்காகக் காணப்படுகிறார்கள்.ஆனால் அது எல்லாப் பள்ளிக்கூடங்களுக்கும் பொருந்தாது. குறிப்பாக ஆசிரியைகள் பண்பாட்டு ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என்று கல்வி அமைச்சு வற்புறுத்துகிறது.அதற்கு கீழ் உள்ள திணைக்களங்கள் வற்புறுத்துகின்றன.பாடசாலை வேளை அல்லாத வேளைகளில் பிள்ளைகளுக்கு ஏதாவது பயிற்சியைக் கொடுப்பதற்காக பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியைகள் சேலை அணிந்து வருமாறு நிர்பந்திக்கப்படுகின்றார்கள்.
சேலையும் பிளவுஸும் ஒரு பண்பாட்டு உடுப்பா என்ற கேள்வி தனியாக ஆராயப்பட வேண்டும். ஆனால் கல்வித் திணைக்களம் பெண்களை பண்பாட்டு உடுப்போடு வருமாறு நிர்பந்திக்கின்றது.அதே சமயம் ஆண்கள் மேலைத்தே உடுப்புகளான சேட்,லோங்ஸ் என்பவற்றோடு வருகிறார்கள். அதை யாரும் பிரச்சினையாகப் பார்ப்பதில்லை.அப்படியென்றால் பெண்கள் மட்டுமா கலாச்சார காவிகள் ?இந்த விடயத்தில் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பையும் அரசாங்கம் பொருட்படுத்தவில்லை.
இவ்வாறாக பிள்ளைகளின் ஆளுமையை உருவாக்கும் கல்விப் புலத்திலேயே பால் சமத்துவம் பேணப்படாத ஒரு நிலை. இங்கிருந்து தொடங்குகிறது எல்லாம்.. பிள்ளை படிக்கும் பொழுதே பால் சமத்துவத்தை கற்றுக் கொள்ள தவறுகின்றது. அது பின்னர் வளர்ந்து ஆளாகும் பொழுது தான் கற்றுக் கொண்டதை பிரயோகிக்கின்றது. குறிப்பாக அரசியலில் அதுவும் ஆயுதப் போராட்டம் ஒன்றுக்குப் பின்னரான அரசியலில் பால் சமத்துவத்தைப் பேணுவதில், பால் சமநிலையை பேணுவதில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு அதுவும் ஒரு காரணம்.
அதோடு ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் போராளிகள் எதிர்கொண்ட பாலியல் சார்ந்த இன்னல்கள் காரணமாகவும் பெண்கள் பெருமளவுக்கு பின்வாங்கும் ஒரு நிலைமை காணப்படுகிறது.அது ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் நேரடி விளைவு என்னலாம்.
எதுவாயினும், கடந்த 15 ஆண்டு கால தமிழ் அரசியலில் பெண் ஆளுமைகளை அரிதிலும் அரிதாகவே காண முடிகின்றது. அண்மையில் தமிழ் பொது வேட்பாளராகிய அரியநேத்திரன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு விருந்தினர் விடுதியில் ஒரு தொகுதி ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அது ஒரு சிநேக பூர்வமான சந்திப்பு. அதில் ஒரு மூத்த ஊடகவியலாளர் கேட்டார்… “இங்குள்ள ஊடகவியலாளர்களில் எத்தனை பேர் பெண்கள்? ஒருவருமில்லை. உங்களுடைய பொதுக் கட்டமைப்பில் எத்தனை பேர் பெண்கள் ? ஒருவரும் இல்லை. உங்கள் மேடைகளில் ஏறும் பேச்சாளர்களில் எத்தனை பேர் பெண்கள்? ஒருவரும் இல்லை.” என்று.
அது நியாயமான கேள்வி. ஆயுதப் போராட்டத்திற்கு முந்தைய மிதவாத அரசியலில் மங்கையற்கரசி போன்ற பெண் ஆளுமைகள் இருந்தார்கள். அவர்கள் மீதும் பெண்கள் என்ற காரணத்திற்காகவே அவதூறுகள் அதிகமாக முன்வைக்கப்பட்டன. ஆயுதப் போராட்டம் பல பெண் பேச்சாளர்களை உற்பத்தி செய்தது. சமாதானப் பேச்சுவார்த்தை மேசைகளிலும் பெண்கள் காணப்பட்டார்கள். வெளிநாட்டு தூதுக் குழுக்களிலும் பெண்கள் காணப்பட்டார்கள்.ஆனால் ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சியோடு பெண் ஆளுமைகளை அரசியலில் அரிதாகவே காண முடிகிறது.வடக்கில்,அனந்தி,வாசுகி கிழக்கில் ரஞ்சனி…போன்ற சிலரைத் தவிர.
இந்த விடயத்தில் உள்ளூராட்சி சபைகளில் 25% பெண்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் வரவேற்கத்தக்கது. அதை ஒரு பண்பாடாக வளர்த்தெடுக்க வேண்டும். சமூகத்தையும் அரசியலையும் அதை நோக்கிப் பண்படுத்த வேண்டும். எல்லாக் கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் பால் சமநிலையை பேண வேண்டும் என்பதனை ஒரு விதியாக,பண்பாடாக பின்பற்ற வேண்டும். ஆளுமை மிக்க பெண்கள் இல்லை என்பதனை ஒரு சாட்டாகக் கூறாமல் பெண்களை ஆளுமை மிக்கவர்களாக எப்படி உருவாக்கலாம் என்று யோசிக்க வேண்டும். ஆண் தலைவர்கள் மட்டும் என்ன ஆளுமையாகாவா இருக்கிறார்கள்? எனவே தலைமைத்துவ பண்பை வளர்த்தெடுப்பது என்ற விடயத்தில் பால் சமநிலையை பேணினால் அரசியல் கட்சிகளின் மத்தியில் அதனை ஒரு ஒழுக்கமாக உருவாக்கலாம். வெளிநாட்டுத் தூதுவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைப் பார்த்து ஏன் உங்கள் மத்தியில் பெண்கள் இல்லை என்று கேட்கும் ஒரு நிலை தொடரக்கூடாது.