ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினரும் கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என். முபீனை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்துவதாக கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தை மீறி ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பகிரங்கமாக ஆதரிப்பதால், தலைவர் ரவூப் ஹக்கீமின் அறிவுறுத்தலின் பேரில் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்படுவதாகவும், ஒரு வார காலத்துக்குள் தன்னுடைய விளக்கத்தை முபீன் கட்சிக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் சம்பந்தமாக கடைசி முடிவு கட்சியின் உயர் பீட கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முபீனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான விளக்கம் கோரும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.