அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் அவர் கடந்த புதன்கிழமை காலை சிஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்பு தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் (PTA) கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2019 ஏப்ரல் 21 அன்று சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான இஸ்லாமிய தீவிரவாதிகள் குழுவால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தற்கொலை குண்டுவெடிப்புகளில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உட்பட எட்டு இடங்கள் குறிவைக்கப்பட்டன.
இதில் குறைந்தது 273 பேர் கொல்லப்பட்டனர, நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்வுக் குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் விசாரணைகள் உட்பட பல விசாரணைகள் தொடங்கப்பட்டன.
அந்த விசாரணைகளின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், பயங்கரவாதக் குழுவுடன் நேரடி தொடர்புகள் இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் நௌபர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற விசாரணையின் நிரந்தர மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது இந்த வழக்கு விசாரணை தினசரி அடிப்படையில் விசாரிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் அரசியல் கை இருப்பதாக பல்வேறு தரப்பினரின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.












