தந்தை என்பவர் எப்போதும் எம் வாழ்வின் ஒளியாகவும் எமது முதல் நாயகனாகவும் திகழ்கின்றார். அவர் எமது கனவுகளை நாம் அடைவதற்கு நமக்கு தரை சிறந்த வழிகாட்டியாக விளங்குகின்றார். அவரின் அன்பும், அர்ப்பணிப்பும் எப்போதும் நம் வாழ்வில் ஒரு வலுவான அடித்தளமாக விளங்குகின்றது.
அத்தகைய அன்பும் பொறுப்பும் கொண்ட தந்தைகளுக்கு மரியாதை செலுத்துவதே தந்தையர் தினம் கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நாள் தந்தைகளின் தியாகம், பாசம் மற்றும் கடமை ஆகியவற்றை நினைவுகூரவும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு சிறப்பு நாளாகவும் காணப்படுகின்றது.
தந்தையின் அன்பு பெரும்பாலும் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கும். இருப்பினும் அந்த அன்பு ஆழமானது. தந்தையின் அர்ப்பணிப்பு மற்றும் கடமை அவருடைய செயல்களில் வெளிப்பட்டு, சொல்லாத ஒரு மொழியாக நம் இதயத்தைத் தொடுகிறது. அவர் எப்போதும் நம் நலனுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்கின்றார்.
தந்தையின் அன்பு, செயல்களின் மூலம் வெளிப்படும். காலையில் எழுப்பும் நேரத்திலிருந்தும், குழந்தையை உற்சாகமூட்டும் வார்த்தைகள் வரை, ஒவ்வொரு சிறு நடவடிக்கையும் அவர் பாசத்தை நிரூபிக்கிறது. சில நேரங்களில், அவர் கடுமையாக பேசலாம். ஆனால், அந்த கடுமையிலே கூடக் கனிவும் அக்கறையும் புதைந்திருக்கும்.
ஆகவே, இந்த தந்தையர் தினத்தில், நம்மை உருவாக்கிய மனிதருக்காக நாம் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்போம். அவருடைய கனவுகளை நம்மால் முடிந்த வரையில் நிறைவேற்றுவதே, அவருக்குச் செய்யும் மிகச் சிறந்த மரியாதையாகும்.