இங்கிலாந்து உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத், காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான புதிய சீர்திருத்தத் திட்டங்களை அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையை அவர் இன்று வெளியிடுகிறார்.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக, அவசர அழைப்புகளுக்கு நிச்சயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிப்பதும், தேவையற்ற காகிதப் பணிகளைக் குறைப்பதும் அமையும்.
இதேவேளை, நகர்ப்புறங்களில் அவசர அழைப்புகளுக்கு 15 நிமிடங்களுக்குள்ளும், கிராமப்புறங்களில் 20 நிமிடங்களுக்குள்ளும் காவல் படைகள் பதிலளிக்க வேண்டும் எனவும் இந்த புதிய திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றவாளிகளைக் கண்டறியவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அதிகப்படியான அதிகாரிகள் வீதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
மேலும், கடைத்திருட்டுகளைத் தடுக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதோடு, தேசிய அளவில் ஒருங்கிணைந்த உளவுத்துறையும் பலப்படுத்தப்பட உள்ளது.
இருப்பினும், காவல்துறையினரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறி எதிர்க்கட்சிகள் இந்த வாக்குறுதிகளின் நடைமுறைச் சாத்தியம் குறித்துக் கேள்வியெழுப்பியுள்ளன.
இப்புதிய மாற்றங்கள் மூலம் உள்ளூர் அளவிலான பாதுகாப்பை மீட்டெடுத்து, குற்றங்களைக் குறைப்பதே அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது.













