தரமற்ற நிலக்கரி இறக்குமதி காரணமாக நாட்டின் மின்உற்பத்தி செயல்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) குற்றஞ்சாட்டினார். ஐக்கிய மக்கள் சக்தி வெளிப்படுத்திய தகவல்களைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் பொறுப்புள்ள தரப்பினரும் தற்போது நிலக்கரி தரமற்றது என ஒப்புக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இந்த தரமற்ற நிலக்கரி பயன்பாட்டால் மின்உற்பத்தி நிலையங்களில் உபகரண சேதம் அதிகரித்து வருவதாகவும், உருவாகும் சாம்பல் அளவு வழக்கமான 11–15 சதவீதத்திலிருந்து 21 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், அடுத்த 2 முதல் 3 மாதங்களில் 15 முதல் 16 நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகத் தகவல் இருப்பதாகவும், தரமான நிலக்கரி இறக்குமதி செய்யப்படாததால் தேவையான மெகாவோட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாமல், எரிபொருள் மின் நிலையங்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் அரசாங்கத்திற்கும் மின் நுகர்வோருக்கும் பாரிய நிதிநட்டம் ஏற்படுகிறது என கூறினார்.
2009ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தின் 30ஆவது பிரிவின்படி, வினைத்திறனான உற்பத்தி மூலமே கட்டணம் அறவிட முடியும் எனக் குறிப்பிட்ட அவர், மின்நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்க இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நட்டத்தை 75 இலட்சம் மின் நுகர்வோரிடம் சுமத்த முடியாது என்றும், இந்த விவகாரத்தில் தடயவியல் கணக்காய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அரச சொத்தான நுரைச்சோலை மின் நிலையத்திற்கு தரமற்ற நிலக்கரி வழங்கப்பட்டமை தொடர்பாக அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.













