நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50, 000ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் டொக்டர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இதுவரை மொத்தம் 50, 459 டெங்கு நோயாளர்களும் 30 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்கக்கூடும். பரவலில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை. வீடுகளையும் அதனைச் சுற்றியுள்ள சூழலையும் வழக்கமாக சுத்தம் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேலும் நீண்ட வார இறுதி நாட்களில் பொதுமக்களின் நடமாட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். இந்த காலகட்டத்தை, வீடுகளையும் சூழலையும் சுத்தம் செய்வதற்காக பயன்படுத்துமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
இது நமது நாடு. இதனை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். ஏனெனில் அவ்வாறு செய்வது இந்த நோயைக் குறைக்க நமக்கு உதவும். எனவேஇ தயவுசெய்து விழிப்புடன் இருங்கள்.இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் உள்ள எவரும் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். அவர்களுக்கு டெங்கு உள்ளதா என்பதைத் தீர்மானிக்க இரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஒருவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்படும் வரை காய்ச்சலைக் கட்டுப்படுத்த பரசிட்டமோல் அடங்கிய மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.













