2025ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக Dictionary.com, ’67’ என்ற எண்ணை தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால் எண்ணாக அல்ல. குறியீடாக. காரணம் இந்த ஆண்டு இந்த எழுத்துதான் இணையத்தில் அதிகம் டிரெண்டானது. டிக்டொக்கில் 67 என்ற ஹேஷ்டேக் 2 மில்லியன் பதிவுகளை தாண்டியது.
இது இந்த அளவு டிரெண்டானது எப்படி?
ஜென் அல்பா தலைமுறையினரால் பயன்படுத்தப்படும் கோட்-வேர்ட் ஆக கூட இந்த 67 என்ற நம்பர் இருக்கலாம். அல்லது ரகசிய குறியீடாகவும் இருக்கலாம். உண்மை அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதில் குறிப்பிடவேண்டிய மற்றொரு விடயம் இதனை ‘அறுபத்தி ஏழு’ என உச்சரிக்கக்கூடாது. மாறாக ‘சிக்ஸ்-செவன்’ என்றுதான் கூறவேண்டும்.
ஆனால் எப்படி புழக்கத்தில் வந்தது?
இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க ரெப் பாடகர் ஸ்க்ரில்லாவின் பாடலிலிருந்து தொடங்குகிறது. அதாவது ஸ்க்ரில்லாவின் “டூட் டூட் (6 7)” என்ற பாடலில் இருந்து இந்த நம்பர் பயன்பாடு தொடங்கியதாக நம்பப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஸ்கிரில்லாவிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு எந்த உள்நோக்கத்தோடும், அர்த்தம் கொண்டதாக நான் அதை வைக்கவில்லை என கூறுகிறார். எதற்கு டிரெண்ட் செய்யப்படுகிறது என எனக்கும் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.
ஜூன் 2025 முதல் 67க்கான தேடல்கள் ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், மற்ற இரண்டு இலக்க எண்களின் தேடல்களை விட இந்த எண்களின் தேடல்தான் அதிகமாக இருப்பதாகவும் Dictionary.com குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் உள்ள கல்வியாளர்கள் “67” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவே தொடங்கியுள்ளனர். காரணம் அதை எதற்காக இளைய தலைமுறையினர் பயன்படுத்துகின்றனர் என தெரியவில்லை. மேலும் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தையாக இருக்கக்கூடும் எனவும் அஞ்சுகின்றனர். ஜென் அல்பா தலைமுறையினரின் இந்த வார்த்தை பயன்பாடு ஆசிரியர்களுக்கு புரியவில்லை, பெற்றோர்களுக்கும் புரியவில்லை. இந்த மோகம் ஒரு பெரிய கவனச்சிதறலாக மாறிவிட்டதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
சில பாடசாலைகள். வகுப்பறையில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியாக சிக்கிய மாணவர்களுக்கு மதிப்பெண் குறைப்பு முதல் எழுத்துப்பூர்வ பணிகள் என தண்டனைகளும் கொடுத்துள்ளனர். நிலைமை இப்படி இருக்க இதனை இந்தாண்டின் சிறந்த வார்த்தையாக Dictionary.com தேர்ந்தெடுத்துள்ளது.
காரணம் என்ன?
“67” என்பது அதன் அர்த்தத்திற்காக அல்ல, மாறாக அதன் அர்த்தமற்ற தன்மைக்காகவே தனித்து நின்றது. இணையம் என்னவாக மாறிவிட்டது என்பதற்கான சரியான ஒரு உதாரணம் இது. இருப்பினும் அதன் பயன்பாட்டாளர்களுக்கு இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இறுதியாக, இவ்வளவு பேசியும் அதன் அர்த்தம் என்னவென்று சொல்லவில்லை என நீங்கள் நினைக்கலாம்.
குறுகிய பதில்: உண்மையில் யாருக்கும் தெரியாது. – அதுதான் இதில் மிக முக்கியமானது.















