சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் இன்று (15) நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டிற்கு வருகை தரவுள்ள கீதா கோபிநாத் ”நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தல் தொடர்பாக நாளை இடம்பெறவுள்ள மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய சீர்திருத்தத் திட்டத்தின் முதல் பாதி நிறைவடைந்துள்ள நிலையில் நடைபெறும் இந்த மாநாட்டில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் உள்ள அனுபவங்கள், கடன் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகம் மற்றும் வரவிருக்கும் சவால்கள் குறித்து கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த விஜயத்தின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர், இலங்கையுடனான சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய உறவு குறித்து இலங்கை அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவும், பிற முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தவும் அவர் எதிர்பார்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச நாணய நிதியத்தில் பணியாற்றும் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர், இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறை என்பதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த விஜயம் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.