உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுந்த் அருகே இன்று டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கிச் சென்ற ஹெலிகொப்டரொன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 7 பேரும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ஹெலிகொப்டரில் விமானி,5 பெரியவர்கள் மற்றும் 1 குழந்தை இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் மேல் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய புனிதத் தலமான கேதார்நாத்த் நோக்கி குறித்த ஹெலிகொப்டர் சென்று கொண்டிருந்த வேளையிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியானது கடினமான நிலப்பரப்பு மற்றும் கணிக்க முடியாத வானிலைக்கு பெயர் பெற்றது எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து உலக விமானப் போக்குவரத்து துறையை உலுக்கி இருந்தது. அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 10 பணியாளர்கள் என 242 பேருடன் கடந்த 12ஆம் திகதி லண்டன் பயணித்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இச் சம்பவத்தில் இதுவரை 274 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.