தெற்கு ஸ்பெயினில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சில நாட்களுக்குப் பின்னர் பார்சிலோனா அருகே பயணிகள் ரயில் ஒன்று செவ்வாய்க்கிழமை (20) தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரயில் சாரதி உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 37 பேர் காயமடைந்தனர் – இதில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை மாலை ரோடலீஸ் ரயில் கெலிடாவிற்கும் சாண்ட் சாதுர்னிக்கும் இடையிலான தண்டவாளத்தில் தடம்புரண்டு தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக உள்ளூர் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
விபத்தினை அடுத்து அனைத்து பயணிகளும் ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கேட்டலோனியா பிராந்திய தீயணைப்பு அதிகாரி கிளாடி கல்லார்டோ தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் சிலரை அருகிலுள்ள மொய்சஸ் ப்ரோகி, பெல்விட்ஜ் மற்றும் விலா ஃபிராங்கா வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதித்ததாக அவசர சேவைகள் தெரிவித்தன.
ஸ்பெயினின் வடகிழக்கு பகுதியை பலத்த புயல்கள் தாக்கியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதே நேரத்தில் ஸ்பெயினின் கிழக்கு மற்றும் வடமேற்கில் உள்ள கடலோரப் பகுதிகள் வானிலை காரணமாக அதிக எச்சரிக்கையுடன் உள்ளன.
அண்டலூசியாவின் அடமுஸில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதிக்கொண்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இது ஒரு தசாப்தத்திற்கும் மேலான மோசமான ஸ்பானிஷ் ரயில் விபத்துகளில் ஒன்றாகும்.
மாட்ரிட் செல்லும் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு எதிர் தண்டவாளங்களைக் கடந்து, பின்னர் எதிரே வந்த அதிவேக ரயிலில் மோதியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

















