இந்தியா, தமிழ் இனத்தின் விடுதலைக்காக சர்வதேசத்தில் தனது பங்களிப்பினை வழங்குமென எதிர்ப்பார்ப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
குறித்த கூட்டத்திலேயே மாவை சேனாதிராஜா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் இதன்போது மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்பு, இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையுமா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்குவது தொடர்பான எண்ணப்பாடு அரசாங்கத்திற்கு இருக்குமாக இருந்தால், தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டுமென்ற எதிர்பார்ப்பே மக்களிடத்தில் காணப்படுகின்றது.
அத்தகையதொரு சூழ்நிலை ஏற்பட வேண்டும். மேலும் அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு தயாராக இருந்தால், நாம் ஏற்கனவே அதற்கான பிரேரணையை வழங்கி இருக்கின்றோம்.
இதேவேளை இலங்கையில் இனப்பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்ற அடித்தளங்கள் சர்வதேச ரீதியாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.
தற்போது மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், முன்னரைவிட பலவழிகளில் முன்னேற்றமடைந்துள்ளது.
மேலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு, மற்றும் போர்க்குற்றங்களுக்கு நீதி ஆகியன இந்த மனிதவுரிமைப் பேரவையில் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்போடு பிரேரணைகளை முன்வைத்திருக்கின்றார்கள்.
இதேவேளை இந்தியா, தமிழ் இனத்தின் விடுதலைக்காக சர்வதேசத்தில் தனது பங்களிப்பினை வழங்கும் என எதிர்பார்க்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.