இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய சினோபோர்ம் தடுப்பூசி சீனர்களுக்கானது என்ற அறிவிப்பில் எந்த உண்மையும் இல்லை என சீனா அறிவித்துள்ளது.
இலங்கையில் 3000 – 4000 சீன பிரஜைகள் மட்டுமே உள்ள நிலையில் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளில் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் மட்டுமே அவர்களுக்கு செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
300,000 பேருக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் 600,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசியை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது என சீனா அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
மீதமுள்ளவை இலங்கையர்களுக்கானது என குறிப்பிட்டுள்ள அவர், எனவே சினோபோர்ம் தடுப்பூசி சீனர்களுக்கானது என்ற அறிவிப்பில் எந்த உண்மையும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் சினோபோர்ம் தடுப்பூசிக்கு இன்னும் அங்கீகாரம் வழங்காத நிலையில் குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அத்தோடு அதற்கு அரசியல் ரீதியாக அங்கீரம் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்துக்கொண்டது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர் ரமேஷ் பதிரண, சினோபோர்ம் தடுப்பூசி சீனர்களுக்கானது என கூறியதுடன் அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரத்திற்காக காத்திருப்பதாக கூறியிருந்தார்.
இதேவேளை சீனாவின் தடுப்பூசி தரமற்றவை என்றும் பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல என சுகாதார அதிகாரிகள் கூறியுள்ள நிலையில் ஜனாதிபதி ஏன் இத்தகைய தடுப்பூசிகளை இறக்குமதி செய்கிறார் என அண்மையில் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.