அரசை நெருக்கடிக்குள்ளாக்கக் கூடாது என்ற நினைப்புடன் அரசை திருப்திப்படுத்தி மக்களைப் பட்டினிபோட்டு நடுத்தெருவில் விடும் வகையில் வடக்கு அதிகாரிகள் சிலர் செயற்படுகின்றனர் என இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் அதிகரித்ததையடுத்து யாழ். நகர் மத்திய பகுதி மற்றும் திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் என்பன முடக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதி மக்களுக்கு அரச உதவிகள் எவையும் கிடைக்கவில்லை. அது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும், யாழ்ப்பாண நகர் மத்திய பகுதியிலுள்ள நவீன சந்தையில் தொற்றாளர்கள் சிலர் எழுமாற்றுப் பரிசோதனையில் கண்டறியப்பட்டனர். அதையடுத்து நகரின் முக்கிய பகுதி முடக்கப்பட்டுள்ளது. சுமார் 225 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அவற்றிா் பணியாற்றும் 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 117 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
ஆனாலும் மாவட்டச் செயலர் அறிவித்த முடக்கப் பகுதிக்குள் அரச மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் செயற்படுகின்றன. எமது உள்ளூர் வர்த்தக நிலையங்கள் மாத்திரம் மூடப்பட்டுள்ளன.
அதுவும் பண்டிகைக்காலத்தில் எமது வர்த்தகர்கள் பெருமளவு முதலீடு செய்துள்ள நிலையில் அவர்களின் வர்த்தக நிலையங்கள் முடக்கப்பட்டு மறுபுறம் பல்தேசிய மற்றும் தென்னிலங்கை வர்த்தக நிறுவனங்கள் அதற்கு அண்மித்த பகுதிகளில் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதுமாத்திரமல்லாமல் திருநெல்வேலி கிராமத்தின் ஒரு பகுதியான பாற்பண்ணை கிராமம் முடக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியை அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினருடன் இணைந்து முடக்கி வைத்துள்ளார்கள். ஆனாலும் ‘கண்காணிப்பு வலயம்’ என்ற ஒரு சொல்லாடலைப் பயன்படுத்தி வருகின்றனர். முடக்கம் என்று அறிவித்தால் அரசின் 5 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கவேண்டும். அது போதாது என்பது வேறு. ஆனாலும் அந்த நிவாரணத் தொகையை மக்களுக்கு வழங்கக் கூடாது என்பதற்காக அல்லது வழங்குவதை தவிர்ப்பதற்காக ‘கண்காணிப்பு வலயம்’ என்று அறிவித்திருக்கின்றார்கள்.
இது தொடர்பில் அதிகாரிகளிடம் தொடர்புகொண்டால், ஒருவரும் பொறுப்பெடுக்கின்றார்கள் இல்லை. பொறுப்பை மற்றவர்கள் மீது சுமத்தி விட்டு தப்பிக்கும் யுக்தியையே கையாள்கின்றார்கள்.
இந்தத் தீர்மானத்தை எடுத்த அதிகாரிகளிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன். நீங்கள் அறிவித்த ‘கண்காணிப்பு வலயத்தினுள்’ உள்ள அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துபவர், அந்தப் பகுதியிலிருந்து வெளியே வந்து தனது தொழில் நடவடிக்கைக்கு செல்ல முடியுமா? இல்லை. அதற்கு பாதுகாப்புத் தரப்பினர் அனுமதிக்க மாட்டார்கள். அப்படியான சூழலில் அவரது குடும்பம் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது? இதையெல்லாம் சிந்திக்காமல், வெறுமனே அரசைக் காப்பாற்றும் வகையில், ‘கண்காணிப்பு வலயம்’ என்று அறிவித்து பாற்பண்ணை கிராம மக்களின் வயிற்றிலடித்துள்ளீர்கள்.
தென்னிலங்கை வர்த்தக நிலையங்களில் தொற்று வராது என்ற அடிப்படையில் அவர்களை வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கும் அதிகாரிகளால் ஏன் உள்ளூர் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்கக் கூடாது.
இத்தகைய மோசமான நிலைமை ஒன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் நடக்கும் நிலையில், இந்த மாவட்டத்து மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட அமைச்சரோ, ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவரோ அல்லது ஏனைய மக்கள் பிரதிநிதிகளோ வாய்மூடி மௌனமாக இருப்பது பொருத்தமற்றது.
பாற்பண்ணைக் கிராமத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்ற வழிவகைகளை அதிகாரிகள் உடனடியாகச் செய்ய வேண்டும். அந்தப் பகுதி மக்களுக்குரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். அரசிடம் நற்பெயர் வாங்குவதற்காக செயற்பாடாது, மக்களின் நலன் சார்ந்து சிந்தித்து அதிகாரிகள் செயற்பட வேண்டும். – என்றுள்ளது.