பேராயர் இராயப்பு ஜோசப்பின் இழப்பு தமிழ் மக்களை அநாதைகள் ஆக்கிவிட்டது என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும், ”பேராயர் இராயப்பு ஜோசப் அவர்கள் ஓர் சகாப்தம் என கூறவது மிகை ஆகாது. பல வழிகளிலும் அன்னாருக்கு அப்பெயர் பொருத்தமாகும். வவுனியாவில் அருட்தந்தையாக கடமையாற்றிய காலத்தில் நான் அவரை முதல் முதலில் சந்தித்தேன். எனக்கும் தனக்குமுள்ள உறவைப்பற்றி எடுத்துரைத்தமை அன்று எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.
இவர் மன்னார் மறைமாவட்ட ஆயராக இருந்தபோது அவருடன் இணைந்து பல துறையிலும் பணியாற்றிய அருட் சகோதரிகளில் ஒருவராகிய மறைந்த ஒலிவியாவையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர விரும்புகின்றேன்.
சமயத் தொண்டோடு அவர் பங்கெடுத்த பணிகள் பல. அவற்றின் மிக பிரதானமானது இனப்பிரச்சினை தீர்வுக்கு அவர் ஆற்றிய தொண்டேயாகும். எவருக்கும் பயப்படாது தான் சரியென நினைத்ததை கடைசிவரை செய்து முடித்தவர் அவர்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் அன்னாரால் சுட்டிக்காட்டப்பட்ட சிறு தவறுகளைக்கூட அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் திருத்திக்கொண்டனர். அச்செயல் அன்னாருக்கு இருசாராரும் கொடுத்த பெரும் மதிப்பினாலேயே ஆகும்.
இனப்பிரச்சினை சம்மந்தமாக சகல தமிழ் அரசியற் கட்சிகளையும் ஒன்று சேர்க்க பெரும் முயற்சி எடுத்திருந்தார். அது சம்மந்தமாக பல தடவைகள் கட்சி தலைவர்களை வரவழைத்து பேச்சு நடத்தியதுடன் ஆலோசனையையும் வழங்கியிருந்தமை உலகறிந்த உண்மை. அதுமாத்திரமன்றி அன்னாரின் பல வெளிநாட்டு விஜயங்களில் எமது பிரச்சினைகள் தொடர்பாக எடுத்த முயற்சியை நான் நேரில் பார்த்துள்ளேன்.
உடல் நலன்குன்றி இந்தியா சென்று வைத்தியத்தை முடித்துக்கொண்டு திரும்பியவேளை அவரை சந்தித்து பேசிய சிலரில் நானும் ஒருவன். இறுதிவரை இனப்பிரச்சினையை மையாமாகவைத்தே செயற்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
அன்னார் உயிருடன் இருந்தவரை எம்மக்கள் மிக்க தைரியமாக செயற்பட்டார்கள் என்பதும், இன்று அவர்கள் அநாதைகளாக்கப்பட்ட நிலையில் உள்ளார்கள் என்பதும் நாம் அனைவரும் அறிவோம். அன்னாரின் ஆத்துமா சாந்தியடைய என்சார்பிலும், தமிழ் மக்கள் சார்பிலும் பிரார்த்திக்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.