உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை கத்தோலிக்க மக்கள் பொறுமையாக இருப்பது வரவேற்கத்தக்க விடயமாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக அறிக்கையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “யேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டும் உயிரிழக்காமல் உயிர்த்தெழுகிறார். குறித்த நாளினை மரணத்தை வெற்றிக்கொண்ட ஒரு தினமாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடுகின்றனர்.
இதேவேளை கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவற்றில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்தனர்.
மேலும் இந்த தாக்குதலினை வன்மையாக கண்டிப்பதுடன், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் கத்தோலிக்க மக்களுக்கும் அனுதாபத்தை மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்துடன் குறித்த தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் வரை விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
இவ்விடயத்தில் கத்தோலிக்க மக்கள் அமைதியாக நீதியை பெற தொடர்ந்து முயன்று வருகின்றமை மதிக்கத்தக்கதோர் விடயமாகும்.
இதேவேளை இன்றைய நன்நாளில் மக்கள் அனைவரிடமும் நல்லொழுக்கம், கருணை மற்றும் அன்பு ஆகியவை எப்போதும் நிலைத்திருக்க வேண்டுமென பிராத்திப்போம்” என பிரதமர் தனது உயிர்த்த ஞாயிறு தின அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.