இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “எனது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் வகையில் கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரைக்கும் என்னுடைய கருத்துக்கும் எதிராக என்னை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரிக்க வேண்டும் என நேற்று சபையில் வலுயுறுத்திய இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவின் கூற்றுக்கு எதிரான தக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும். இவரின் இந்த கருத்தானது சபையில் உள்ளவர்களுக்கும் ஓர் அச்சுறுத்தலான விடையமாகும். சபையில் எனது கருத்துக்களை சுதந்திரமாகவும், பயமின்றியும் பதிவிடுவதற்கான முழு அதிகாரமும் எனக்கு உண்டு.
“அரசாங்கம் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள 2021 ஆம் ஆண்டளவில் இன்னொரு தாக்குதலுக்கும் திட்டமிட்டால் கூட சந்தேகப்படுவதற்கில்லை.
ஏனெனில், இவர்கள்தான் கடந்த காலங்களில் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியவர்கள். அவரைப் போன்ற ஒருவர் மீண்டும் இந்த அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கலாம். இதுதொடர்பாக நாட்டு மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.“ என அன்றைய தினம் தெரிவித்திருந்தேன்.
இந்த கருத்துக்கு எதிராக அவர் என்னைக் கைது செய்து விசாரிக்கவேண்டும் என கூறியிருப்பது எனது சிறப்புரிமையை மீறும் செயல்பாடாக காணப்படுகின்றது.
எமது கட்சியானது புதிய கட்சி இல்லை 1948ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாகும். எமக்கு எல்லா உரிமையும் உண்டு. இந்த ஜனநாயக நாட்டில் இவ்வாறான ஒழுக்க விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படவேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.