சிலரின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தை பலவீனமடைய செய்யும் வகையில் அமைகின்றதென அமைச்சர் பந்தல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற சில செயற்பாடுகள் ஏற்புடையதல்ல.
அதாவது நாடாளுமன்ற உறுப்பினரின் சில செயற்பாடுகள், நாடாளுமன்றத்தை கீழ் நோக்கி கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது.
தினேஷ குணவர்தன, லக்ஷமன் கிரியெல்ல ஆகியோர் இந்த நாடாளுமன்றத்தில் பல வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.
ஆனால் இத்தகைய காலகட்டத்தில் அநாவசியமாக கேள்விகளை கேட்டு, தங்களுக்கு ஏற்றவகையில் செயற்படுவதற்கு இதுவரை காலமும் இலங்கை நாடாளுமன்றத்தில் எவருக்கும் இடமளிக்கப்படவில்லை.
நாட்டிலுள்ள எந்த அமைப்புக்களும் நீதிமன்றம், சட்டத்திட்டங்கள் ஆகியவற்றினை மதித்து செயற்படாவிடின் இடையிலேயே காணாமல் போய்விடும்.
மேலும் அதிபரின் கருத்துக்கு மதிப்பளித்து கல்வி நிலையம் இயங்கவில்லை என்றால் வீழ்ச்சியை நோக்கியே செல்லும்.
நாடாளுமன்றம் முழு நாட்டையும் பிரதிபலிக்கின்றது என்பதை கருத்திற்கொண்டு ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளும் செயற்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.