பிரித்தானியாவிற்கு சர்வதேச பயணம் எவ்வாறு மீண்டும் அனுமதிக்கப்படும் என்பது குறித்த கூடுதல் விபரங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.
‘போக்குவரத்து சமிஞ்சை விளக்கு’ திட்டத்தின் கீழ், நாடுகள் ஆபத்து அடிப்படையில் வகைப்படுத்தப்படும். இதனடிப்படையில் பயணிகள் வரவேற்கப்படவுள்ளனர்.
இதன்படி, பயணிகள் அவர்கள் புறப்படுவதற்கு முன்பும், திரும்பும் போதும் கொரோனா வைரஸ் சோதனைகளை எடுக்க வேண்டும்.
எனினும், மே 17ஆம் திகதி முதல் வெளிநாட்டு விடுமுறைகள் அனுமதிக்கப்படுமா என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை.
போக்குவரத்து ஒளி அமைப்பு எவ்வாறு செயற்படும்:
பச்சை: பயணிகள் திரும்பி வரும்போது தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் புறப்படுவதற்கு முந்தைய சோதனை (வகை குறிப்பிடப்படவில்லை). அதே போல் பிரித்தானியா திரும்பும்போது பி.சி.ஆர் சோதனை
செம்மஞ்சள்: பயணிகள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும். அதே போல் புறப்படுவதற்கு முந்தைய சோதனை மற்றும் இரண்டு பி.சி.ஆர் சோதனைகளையும் எடுக்க வேண்டும்
சிவப்பு: பயணிகள் நிர்வகிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் 10 நாட்கள் தங்குவதற்கும், புறப்படுவதற்கு முந்தைய சோதனை மற்றும் இரண்டு பி.சி.ஆர் சோதனைகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.
எந்த நாடுகள் பச்சை, செம்மஞ்சள் அல்லது சிவப்பு நிறமாக இருக்கும் என்று அரசாங்கம் இன்னும் அறிக்கையிடவில்லை. ஆனால் மே மாத தொடக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கென்யா மற்றும் பங்களாதேஷ் ஆகியவை சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டன.
எந்தவொரு நடவடிக்கைகளையும் திரும்பப் பெற முடியுமா என்பதைப் பார்க்க ஜூன் மாத இறுதியில் விதிகள் மதிப்பாய்வு செய்யப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.