யாழ். மாநகர சபையின் முதல்வர் மணிவண்ணனின் கைதானது அரசாங்கத்தின் எதேச்சதிகாரச் செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “யாழ். மாநகர முதல்வர் கைதானது தமிழ் மக்களுக்கு ஆபத்தான சூழ்நிலையொன்று உருவாகிக்கொண்டிருப்பதைக் காட்டுகின்றது.
மாநகர சபைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மாநகர காவல் அணியை உருவாக்க முடியும். மட்டக்களப்பு மாநகர சபையில் 2018ஆம் ஆண்டு இவ்வாறான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு பொலிஸ் திணைக்களம் ஊடாகப் பத்துப் பேர் கொண்ட காவல் அணியொன்று கோரப்பட்டிருந்தது. அது தொடர்பான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை.
யாழ். மாநகர சபையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சீருடையானது பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒன்றே” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.