பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து இலங்கை விமானப்படை வீரர் ஆசியாவில் புதிய சாதனை படைத்துள்ளார்.
ரொஷான் அபேசுந்தர என்ற வீரரே இவ்வாறு, தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஸ்கோடி வரை நீந்திச் சென்று மீண்டும் தலைமன்னார் வரை நீந்தி சாதித்துள்ளார்.
இவர், மொத்தமாக 59.3 கிலோமீற்றர் தூரத்திற்கு நீந்தியுள்ளதுடன், இதற்காக அவருக்கு 28 மணித்தியாலங்கள், 19 நிமிடங்கள் மற்றும் 43 விநாடிகள் நேரம் எடுத்துள்ளது.
பாக்கு நீரிணையைக் கடப்பதற்கான தனது பயணத்தை ரோஷான் அபேசுந்தர நேற்று சனிக்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் தலைமன்னார் இறங்குதுறையில் இருந்து ஆரம்பித்தார்.
இந்நிலையில், தமிழகத்தின் தனுஷ்கோடியைச் சென்றடைந்த அவர், அங்கிருந்து மீண்டும் நீந்தி இன்று அதிகாலை மூன்று மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.
இதேவேளை, இதற்குமுன்னர் 1975ஆம் ஆண்டில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஆழிக்குமரன் என்றழைக்கப்படும் குமார் ஆனந்தன் என்பவர் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து மீளத்திரும்பிய முதல் இலங்கையர் என்ற சாதனையைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.