தரமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய 6 கொள்கலன்கள் தற்போது கப்பலில் ஏற்றப்பட்டு வருவதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
மீள் ஏற்றுமதிக்கு உத்தரவிடப்பட்ட குறித்த நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவின் ஊடக பேச்சாளர், சட்ட நடவடிக்கை தொடர்பான உதவி சுங்கப்பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 3 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 15 மெட்றிக் டன் அளவுடைய 6 கொள்கலன்கள் அடங்கிய தேங்காய் எண்ணெய் பார்பரா கப்பலின் ஊடாக மீள் ஏற்றுமதி செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தர நிர்ணய நிறுவனம் மேற்கொண்ட ஆரம்ப சோதனைகளில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை எற்படுத்தும் அஃப்லாடாக்சின் இரசாயனம் இருப்பது தெரியவந்தது.
அதன் பின்னர், அசுத்தமான தேங்காய் எண்ணெயை மீண்டும் அனுப்ப தயார் செய்யுமாறு சுங்கப்பணிப்பாளர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.