புதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உறுதியுடனும் சித்திரைப் புத்தாண்டை வரவேற்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மலர்ந்திருக்கும் பிலவ புதுவருத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பாரம்பரியம் மிக்க எமது கலாசாரத்தில் ஒரு மதிப்புமிக்க நாள் இன்றாகும் என்றும் புதிய உத்வேகத்துடன் புதுவருடத்தை வரவேற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் புத்தாண்டு பிறப்பின் போது நாட்டில் நிலவிய சீரற்ற சுகாதார நிலைமைகள் அதற்குத் தடையாக இருந்தபோதிலும், பண்டைய பாரம்பரியங்கள் மற்றும் மரபுகளுக்கு முன்னுரிமை அளித்து, சுகாதார ஆலோசனைகளுக்கு ஏற்ப புத்தாண்டை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கக்கூடிய வகையில் இந்த ஆண்டின் பின்னணியை நாம் அனைவரும் சேர்ந்து அமைத்திருக்கின்றோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புத்தாண்டின் விடியலை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் சிறு பிள்ளைகளைப் போலவே, அனைத்து குடிமக்களினதும் எதிர்பார்ப்பு நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சூழலில் ஏற்படும் இனிமையான மாற்றங்கள் எமக்கு உடல் மற்றும் உள ஆறுதலைத் தருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிக்கலான எண்ணங்களுடன் வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபடும் வளர்ந்தவர்கள் அவர்களுக்கிடையே ஏற்படும் கவலைதரும் மனக்குறைகளை தேற்றிக்கொள்ள கிடைப்பதும் புத்தாண்டின் ஒரு விசேட சிறப்பம்சமாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிட்டிக்காட்டினார்.
அனைத்து மக்களும் எந்தவிதமான பேதங்களும் இன்றி அமைதியானதும் நேர்மையானதுமான எண்ணங்களுடன் புத்தாண்டு சம்பிரதாயங்களில் இணைந்துகொள்ள வேண்டும் என்பது தனது எதிர்பார்ப்பு என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.