அரச சார்பற்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்டோரைக் காட்டி, காசு உழைக்கும் இயந்திரங்களாக தற்போது மாறியுள்ளன என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் நாம் நிதிக்காக எப்போதும் போராடவில்லை. நீதிக்காகவே தொடர்ந்து போராடி வருகின்றோம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரச சார்பற்ற நிறுவனமொன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் குடும்பங்களுடன் கலந்துரையாடலொன்றை இன்று நடத்தவுள்ளன.
இந்நிலையிலேயே அவ்விடயம் தொடர்பாக தெளிவூட்டலொன்றினை ஏற்படுத்தும் முகமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டது.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரச சார்பற்ற நிறுவனம் தொடர்பாக இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன்போது அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னாரினை தளமாக கொண்டு இயங்கும் அரச சார்பற்ற நிறுவனமொன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளது.
மேலும் தங்களது பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக உரிய அதிகாரிகளுக்கு மகஜர் கையளிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளது.
இதில் உண்மைத்தன்மை இல்லை என்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களை திசை திருப்பும் நோக்கமாகும்.
ஆகவே பாதிக்கப்பட்ட மக்களை, இவ்விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கின்றோம்.
மேலும் அரசசார்பற்ற நிறுவனங்கள் பெரும்பாலும், பாதிக்கப்பட்டோரை காட்டி காசு உழைக்கும் இயந்திரங்களாகவே தற்போது காணப்படுகின்றது.
குறித்த நிறுவனங்கள், நிதிகளை பெறவேண்டுமெனின் அரசின் அனுமதி மிகவும் அவசியமாக இருக்கின்றது.
இவைகள் அரசின் செயற்பாட்டுக்கு எதிராக ஒருபோதும் குரல் கொடுக்கப்போவதில்லை.இத்தகைய நிறுவனங்கள், காணாமல் ஆக்கப்பட்டோர், பாதிக்கப்பட்ட தமிழர்களிற்கான தீர்வு ஆகியவற்றை நீர்த்துப்போகச்செய்து, பணம் சம்பாதித்தமையே கடந்த காலங்களில் பார்க்க கூடியதாக இருந்தது.
அந்தவகையில் நாம், நிதிக்காக போராடவில்லை. நீதிக்காகவே இத்தனை காலங்கள் தொடர்ந்து போராடி வருகின்றோம்” என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.