திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றுகின்ற 5 தாதியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வி.பிரேமானந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் திருகோணமலை நகர்புறத்திலுள்ள 3 பாடசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வி.பிரேமானந்த் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 5 தாதியர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த தாதியர்களில் ஒருவருக்கு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் கடமை புரிவதற்காக வேறு தாதியர்கள் அங்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள வேறு வைத்தியசாலைகளில் இருந்து நோயாளர்களை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்படும் செயற்பாடானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் மாற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட இருக்கின்றது.
இதேவேளை திருகோணமலை நகர்புறத்தில் இருக்கின்ற 3 பாடசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதாவது, ஒரு பாடசாலையில் மாணவர் ஒருவருக்கும் ஏனைய இரு பாடசாலைகளில் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் இருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவருடன் தொடர்பினை பேணியவர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் தொடர்ச்சியாக பி.சி.ஆர் மற்றும் அண்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.