மத்திய தரைக்கடலில் 130 அகதிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த றப்பர் படகு விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐரோப்பிய மனிதாபிமான குழு (எஸ்.ஓ.எஸ்) தெரிவித்துள்ளது.
லிபியா தலைநகர் திரிபோலிக்கு வடகிழக்கே, நேற்று (வியாழக்கிழமை) இரவு படகு, விபத்துக்குள்ளாகி மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
இந்த படகுக்கு அருகே 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் எஞ்சிய யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓஷன் வைக்கிங்கில் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பாளர் லூயிசா அல்பெரா கூறுகையில்,
‘நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்ததிலிருந்து, எஞ்சிய எவரையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை, அதே நேரத்தில் குறைந்தது 10 சடலங்களை இடிபாடுகளுக்கு அருகில் காண முடிந்தது. நாங்கள் மனம் உடைந்தோம்’ என கூறினார்.
மத்திய மத்தியதரைக் கடலில் நடந்த இந்த சம்பவத்தில் குறைந்தது 100 உயிர்கள் பறிபோனதாக சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பின் (ஐஓஎம்) தலைமைத் தலைவர் யூஜெனியோ அம்ப்ரோசி தெரிவித்தார்.
‘இவை சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்தத் தவறும் கொள்கைகளின் மனித விளைவுகள் மற்றும் மனிதாபிமான கட்டாயங்களில் மிக அடிப்படையானவை’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.