முன்னாள் அமைச்சரும், நாடாளுன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளமையின் ஊடாக, நாட்டின் சட்டவாட்சி அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளமையை உணர முடிந்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ரவூப் ஹக்கீம், இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, புனித ரமழான் மாதத்தின் நள்ளிரவில், ரிசாட் பதியூதீன் சபாநாயகரின் அனுமதியோ நீதிமன்ற உத்தரவோ இன்றி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளமை மிகவும் கவலையளிக்கின்றது.
குறித்த செயற்பாடு அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை மேலும் கேள்விக் குறியாக்குகின்றன. மேலும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 2 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டு அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் பேராயர் உள்ளிட்டோர் குறித்த அறிக்கை தொடர்பில் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளதுடன் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன.
அந்தவகையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரி யார் என்பதை மறைத்து, மக்களை திசை திருப்பும் விதமாகவே இந்த கைதுகள் இடம்பெற்று வருகின்றன.
முஸ்லிம்கள் மத்தியில் பிரபலமான அரசியல்வாதிகளை தொடர்புபடுத்துவதன் வாயிலாக பெரும்பான்மைச் சமூகத்தினரிடையே முஸ்லிம் சமூகத்தின் மீது மேலும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாகவே இதனை பார்க்க தோன்றுகின்றது.
தேர்தலை நோக்காக கொண்டு அப்பாவி பெரும்பான்மை மக்களின் ஆதரவினை பெறுவதற்காக இவ்வாறான கைதுகள் இடம்பெறுகின்றன” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.