நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாத் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு –பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன் அவரது சகோதரர் ரியாத் பதியுதீன் வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, அவர்கள் இருவரையும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி பெறப்பட்டிருந்தது.
விசாரணைகளுக்காக வழங்கப்பட்ட காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், மீண்டும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.