மன்னாரிலுள்ள 2578 ஏக்கரில், சிறு போக பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டிற்கான சிறு போக பயிர்ச் செய்கை மேற்கொள்வது தொடர்பாக மன்னார் உயிலங்குளம் விவசாய மாநாட்டு மண்டபத்தில், அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது 11 ஆம், 12 ஆம், 13 ஆம் கட்டை பிரதான வாய்க்கால்கள், பெரிய உடைப்பு பிரதான வாய்க்கால், சின்ன உடைப்பு பிரதான வாய்க்கால், அடைக்கல மோட்டை பிரதான வாய்க்கால் ஆகியவற்றின் ஊடாக 2578 ஏக்கரில், நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை மேலதிகமாக குருவில் வான் வாய்க்கால் ஊடாகவும் 400 ஏக்கர் மேட்டு நில பயிர்ச் செய்கையை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு தேவையான விதை நெல் விநியோகம், உர விநியோகங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் நீர்பாசன திணைக்களம், பிரதேசச் செயலாளர்கள், விவசாய திணைக்களம் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.