டெல்லியில் அடுத்த ஒரு மாதத்திற்குள் 44 ஒக்சிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்க உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கொரோனா மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ கடந்த 4 முதல் 5 நாட்களாக நாட்டின் பெரும்பாலான நிறுவனத்திடம் உதவிக்கோரி கடிதம் எழுதியுள்ளேன்.
மிகப்பெரிய உதவிகளைத் தற்போது பெற்று வருகிறோம். அதிக அளவிலான மக்களிடமிருந்து உதவிகள் வருகின்றன. டெல்லி அரசுக்கு உதவும் அனைவருக்கும் நன்றி.
அடுத்த ஒரு மாதத்திற்குள் 44 ஒக்சிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்க உள்ளோம். அதில் மத்திய அரசு 8 நிலையங்களையும் , மாநில அரசு 36 நிலையங்களையும் உருவாக்க உள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ள 21 உபகரணங்கள் உடனடியாக டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் நிறுவப்படவுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.