முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், பொது மக்கள் கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு தங்களின் வீடுகளிலேயே அஞ்சலியை செலுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கேட்டுக் கொண்டார்.
யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது சித்தார்த்தன் மேலும் கூறியுள்ளதாவது, “எங்களுடைய மக்களின் இழப்பை நினைகூர்வதற்கு மறுக்கப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக நாடாளுமன்றம் ஊடாக சர்வதேசத்தின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டுச் செல்வோம்.
முள்ளவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக நடுவதற்காக கொண்டுவரப்பட்ட கல்லும் களவாடப்பட்டுள்ளன.
இவைகள் ஒரு விடயத்தினை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. அதாவது, இந்த நாட்டில் மரணித்த எங்களது உறவுகளை நினைவு கூர்வது மாத்திரம் அன்றி நினைவுச் சின்னத்தைக் கூட வைத்திருக்க கூடாது என்ற நிலைமையை இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
குறித்த செயற்பாடு, தமிழ் மக்களை மிகவும் கவலைக்கு உள்ளாக்க கூடிய விடயமாக இருக்கின்றது.
இதேவேளை உயிரிழந்தவர்களின் இலட்சியங்களை வென்றெடுக்க வேண்டும் என்பதுடன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்தே தங்களது உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துங்கள்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.