இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் இரண்டாயிரத்து 456 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 45 ஆயிரத்து 202 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 629 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 24ஆயிரத்து 611 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் மேலும் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
பொரலஸ்கமுவ, மெதகீபிய, வஸ்கடுவ, மக்கொன, களுத்துறை, பயாகல, மொரட்டுவ, அம்பேபுஸ்ஸ, காலி, கடடுவன, பாதுக்க, தம்புள்ள, தெனிய, ஹப்புகஸ்தலாவ, உடபிட்டிவல மற்றும் கடுவெல ஆகிய பிரதேசங்களிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
14 ஆண்களும் 5 பெண்களுமே இவ்வாறு மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 981 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.