யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மிகக் குறைந்த நாட்களில் 50,000 தடுப்பூசியினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிலையங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர், யாழ்ப்பாணத்தினை தொடர்ந்து கிளிநொச்சி, வவுனியா முல்லைத்தீவு ஆகிய இடங்களிலும் அடுத்த கட்டமாக தடுப்பூசி வழங்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
ஆகையினால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள இந்தத் தடுப்பூசிகளை, விரைவாக மக்களுக்கு வழங்கும் செயற்பாட்டினை சுகாதார அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும்.
மேலும் இந்த முதல்கட்ட தடுப்பூசியினை விரைவாக வழங்காவிடின் அடுத்த இரண்டாம் கட்ட தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படும்.
ஆகவே தடுப்பூசி வழங்கும் நிலையங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து, மிகக் குறைந்த நாட்களில் இந்த 50,000 தடுப்பூசியினை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுங்கள்” என சுகாதார அதிகாரிகளுக்கு, அமைச்சர் நாமல் பணிப்புரை விடுத்துள்ளார்.