கொரோனாவின் 3 ஆவது அலையில் மட்டக்களப்பில் மாத்திரம் 37 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் 2200 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 983 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க அதிபர் க.கருணாகரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ எமது மாவட்டத்துக்கும் 25 ஆயிரம் கொவிட்-19 தடுப்பூசிகள் கிடைக்க இருக்கின்றன.
குறித்த தடுப்பூசிகளை 6 பிரிவுகளாக பிரித்து வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எமது மாவட்டத்திலுள்ள முதியோர் இல்லங்களில் வாழும் 146 முதியோர்களுக்கு இந்த தடுப்பூசி ஏற்றப்படும்.
மேலும் கொரோனா அதிகமாக காணப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், குறிப்பாக பொது மக்களுடன் நேரடி தொடர்பை பேணுகின்ற அல்லது கள விஜயங்களில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரை 6 வகையாக பிரித்து, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படும்.
இதேவேளை மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 5 கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட நிலையில் 4 கிராமசேவர் பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலம் நொச்சிமுனை கிராமசேவகர் பிரிவு தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளதுடன் ஏறாவூர்நகர் கிராமசேவகர் 2 பிரிவு உட்பட இரண்டு கிராமசேவகர் பிரிவு மாத்திரமே மாவட்டத்தில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதற்கு, பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதன் ஊடாக மாத்திரமே முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.