மட்டக்களப்பில் 1000 பேருக்கான கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டதாக அம்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பாக வைத்தியர் நா.மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு மற்றும் ஏறாவூர் ஆகிய பகுதிகளில், கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அந்தவகையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று காலை, ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதில் பிரதேச செயலகம், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், உள்ளூராட்சிமன்ற ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்படுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் ஊடாக ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுகளிலும் மக்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.