மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன உபதலைவரும் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமரச தலைவருமான திரு. வர்ணகுலசிங்கம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம்(திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘அண்மைய நாட்களில் கொழும்பில் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக மீன் விற்பனை மிகவும் குறைந்துள்ளன.
இந்த நிலையிலும், மீன்களின் விலையும் மிக மிக குறைந்துள்ள நிலையிலும் தற்போது மண்ணெண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதானால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், தற்போதைய பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் விலை உயர்வு மிகவும் பாதிப்பாக அமைந்துள்ளது.
இதனால் கடந்த காலங்களைப் போன்று மீனவர்களுக்கான மானிய மண்ணெண்ணெய் வழங்கும் திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர், மற்றும் மீன்பிடி அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.