ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானத்தால் நாட்டில் உர இறக்குமதியானது தடை செய்யப்படும் நிலைமைக்கு தள்ளப்படும் வாய்ப்பு காணப்படுவதாக கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அருண் ஹேமச்சந்திரா மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் பெரும்பாலான மக்கள் விவசாய நடவடிக்கையினையே முன்னெடுத்துள்ளனர்.
ஆனால், அவர்களது விவசாயத் தேவைகளுக்கான உரங்கள் சீராக வழங்கப்படாத வேளையில் பஞ்சம் ஏற்பட கூடிய சாத்தியக்கூறு நிலவுகின்றது.
இதேவேளை எந்தவித விஞ்ஞான ரீதியான ஆய்வும் மேற்கொள்ளாமல், ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானத்தால் நாட்டில் உர இறக்குமதியானது தடை செய்யப்படும் நிலைமை காணப்படுகின்றது.
இவ்வாறு எந்தவிதமான மாற்றீடுகளும் இல்லாமல் உர இறக்குமதியை தடை செய்வது நல்லதொரு விடயமல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளார்.