இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக அவரின் மெய்ப்பாதுகாவலரினால் சுட்டுக்கொல்லப்பட்டவரின் சடலம் நேற்று(புதன்கிழமை) மாலை பெருமளவான மக்களின் பங்களிப்புடன் ஊறண மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அமல் எங்கள் நண்பனை மீட்டுத்தரமுடியுமா?, கரங்கொடுத்து தூக்கிவிட்டவர்களை காலடியில் நசுக்கும் விசமிகளின் பசிக்கு இரையாகிய அப்பாவி இளைஞனின் மரணத்திற்கு நீதிவேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பதாகைகளை சடலம் தாங்கிய பேழை ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
மட்டக்களப்பு, ஊறணி, மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக அமைச்சரின் மெய்பாதுகாவலரினால் சின்ன ஊறணியை சேர்ந்த மகாலிங்கம் பாலசுந்தரம் என்னும் இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தாங்கள் மன்ரேசா வீதியில் உள்ள வீடு ஒன்றில் காசு வாங்கிவிட்டு முச்சக்கர வண்டியில் செல்லும்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக மரத்தின் கீழ் இருந்த மெய்பாதுகாவலர் குறித்த நபரை அழைத்ததாகவும் இதன்போது தாங்கள் முச்சக்கர வண்டியை திரும்பிவந்து குறித்த மெய்பாதுகாவலரிடம் என்ன அழைத்த என்று கோரியபோது இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்ற நிலையில் திடீர் என மெய்பாதுகாவலர் இடுப்பிலிருந்து துப்பாக்கியை எடுத்து குறித்த நபரின் தலை மீது சுட்டதாகவும் குறித்த சம்பவத்தின்போது உயிரிழந்த நபருடன் வந்தவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு மணி நேரம் உயிரிழந்த நபரின் இல்லத்தில் சடலம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
குறித்த நபரின் உடலத்திற்கு அரசியல்வாதிகள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து ஊர்வலமாக பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் பெருமளவானோர் புடைசூழ சின்ன ஊறணி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன்போது சடலம் வைக்கப்பட்டிருந்த பகுதியெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.